Thursday, August 7, 2014
மருதகுளம் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைத்துகொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் ரோசலின்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவ மாணவியர் நாங்குநேரி அரசு பள்ளிக்கு சென்று அரசு பொதுத் தேர்வுகளை எழுதி வந்தனர். சுமார் 15 கிலோமீட்டர் தூரம் மாணவ மாணவியர் இரண்டு பஸ்கள் ஏறி சென்று தேர்வு எழுதி வருவதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனரும் சமூக சேவகருமான நல்லாசிரியர் ஜான்கோவில்பிள்ளை அரசிற்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதனை பரிசீலனை செய்த பள்ளி கல்வித் துறை வரும் கல்வி ஆண்டு முதல் மருதகுளம் ரோசலின்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பொது தேர்வு மையம் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்களும், மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் கலை,தொழில் பாட பிரிவுகளை துவக்கி அதற்கான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தல்
மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டிலேயே பொதுத் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என அப் பகுதி மக்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
மருதகுளம் ரோசலின்ட் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 855 பேர் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக 10ஆம் வகுப்பில் 135 பேரும், 12ஆம் வகுப்பில் 94 பேரும் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆனால், இந்தப் பள்ளியில் பொதுத் தேர்வு மையம் இல்லாததால் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள நான்குனேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. மருதகுளத்தில் இருந்து நான்குனேரிக்கு செல்ல வேண்டுமெனில் 2 பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். தேர்வு நேரத்தில் மையத்துக்கு செல்ல மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
அலைச்சலால் மாணவர்கள் சோர்வடைந்து தேர்வை சரிவர எழுதமுடியாமல் போகிறது. எனவே, மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும் என எம்பி, எம்எல்ஏ, ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
மேலும், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும் கலைப் பிரிவு, தொழில்கல்வி பாடப் பிரிவுகள் தொடங்கப்படாத நிலையே உள்ளது. கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளைத் தவிர இதரப் பிரிவுகளை தேர்வு செய்யும் மாணவர்கள் தொலைவில் உள்ள வேறு பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
பள்ளியில் பொதுத் தேர்வு மையத்துக்கு போதுமான இடவசதி உள்ளதாகவும், ஆனால் என்ன காரணத்தினாலோ பொதுத் தேர்வு மையம் அமைக்காமல் காலதாமதம் செய்யப்படுவதாக ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநர் ஜான் கோயில் பிள்ளை புகார் கூறினார்.
நிகழ் கல்வியாண்டிலேயே 10ஆம் வகுப்பு மாணவர்கள் வசதிக்காக இந்தப் பள்ளியில் பொதுத் தேர்வு மையத்தை அமைப்பதுடன், அனைத்துப் பாடப் பிரிவுகளையும் தொடங்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Comments (Atom)